Wednesday, March 12, 2008

அவள் ஒரு வெள்ளை நிழல்


பனித்துளி இரவுகளில்
விழித்துத்துணை கனவுகளோடு
வழித்துத்துணையாக வர வேண்டும்
நீ எனக்கு...

புரியாத மொழி பேசி
கண்களால் கைது செய்து
விழியோர ஈரம் காட்டி
மனதோர ரணம் ஆற்றும்
வெள்ளை நிழல் தேவதையே
வழித்துணையாக வர வேண்டும் - நீ எனக்கு...

விடியும் இரவுகளின்
விடியாத நொடிகளில்
முடியாத பயணங்களின்
பிரியாத ஒரு நிழலாய்
வழித்துணையாக வர வேண்டும் - நீ எனக்கு...

உயிரோடு இருந்தாலும்
உந்தன் நினைவுகளால்...
நிழல்களின் உணர்வுகளோடு
உன்மத்தம் பிடித்தவனாய்...
நான்...நான் மட்டும் தனியே !
வழித்துணையாக வர வேண்டும் - நீ எனக்கு !!!

Saturday, March 8, 2008

பெண்

Written for Women's day celebration


பெண் என்பவள் ஒரு ஆழ்கடல் ...
ஆழ்கடலை கடக்க கட்டு மரம் போதாது
கப்பல்கள் வேண்டும் ! என்னிடம் உளதோ கட்டு மரமே!!

எனினும் கட்டு மரத்தின் கரம் பிடித்து
கடலை கடக்க எண்ணி உள்ளேன்,
முடியுமா என முயற்ச்சிக்கின்றேன் !!!

ஒற்றை சொல்தான் "பெண்" என்பது...
ஆனால் ஒன்றுக்குள் ஓராயிரங்களை கொண்டது...
இங்கு ஓராயிரம் என்பதும் தோராயம் தான் எனக்கு...
எழுத வேண்டும் என்பது... ஓரளவு கடினம்தான்...

"தாயானவள் இல்லை என்றாள்-
இத்தரணியில் உலவுவார் யாரோ ???"
என்பதே அடக்கி கொண்டது அத்தனையும்!

தாயாகி... பின் தங்கையாகி, தமக்கையாகி...
பின்னொருவன் கரம் பிடித்து தாரமாகி,
மீண்டும் தாயாகிறாள் தன் மகவுக்கு !

ஜனன சக்கரத்தில்
ஜகத்தின் சுழற்சியில்
என்றுமே மீட்சியில்லை
பெண்னே உன் பெருமைக்கு !

இதை அன்றே உணர்ந்ததால் தான்
பெயர் வைத்துவிட்டான் பலவாய் பெண்ணுக்கு...
"பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம்பெண்"

போற்றுதலுக்கு உரியவள் என்பதால் பேதை,
பெருமைக்கு உரியவள் என்பதால் பெதும்பை,
மானம் காப்பவள் மங்கை,
மடமை சொல் ஒழிப்பவள் - மடந்தை,
அறிவினை அளிப்பவள் அறிவை,
அறிந்து பின் நடப்பவள் தெரிவை...
பேரன்பு கொண்டவள், பெருமைகள் உணர்பவள்,
போதனைகள் ஏற்பவள், போதித்து பின் நடப்பவள் ... என்பதால் பேரிளம்பெண் !!!

அச்சம், மடம், நானம், பயிர்ப்பு
போதுமே பெண்ணுக்கு- என்ற பலரையும்
நான் உதவாக்கரை எனத் தூற்றியுள்ளேன்.

தூற்றிய எனக்கு தூறல்களாய் கீதங்கள்
காற்றினில் மிதந்து காதருகே ஒலித்தது
கானமாய் வார்த்தைகள் ...

தியாகத்திற்கு தெரசாவாய்,
வீரத்திற்கு கிரன்பேடியாய்,
இசைக்கு லதாமங்கேஷ்கராய்,
சாந்தத்திற்க்கு சாரதா தேவியாய்,
இன்னும் .. இன்னும்..
இன்பங்களாய் வார்த்தைகள்,
எத்தனையோ எத்தனையோ!!!

இன்பத்தை இயம்புதல் என்பதில்
எனக்கும் இன்பம்தான் !!!

பூட்டிய பேழைக்குள்
ஓட்டிய குதிரையை உடைத்தெறிய உதவிய
பாரதியை நான் போற்றுகின்றேன் !
அவ்வம்சத்தவன் என்பதால் மட்டுமல்ல,
அவ்வழியில் நடப்பவன் என்பதாலும் தான்.

ஒன்றுமே தேவையில்லை - என
ஓரறைக்குள் உட்கார வைத்து - உன்னை
ஒன்றும் அறியாதவளாக்கிய
உலக கட்டை உடைத்தெரிந்து
ஒன்றுபோல் ஓராயிரங்களை கற்று - இன்று
உலகை உன் வசமாக்கிய- உன்னை போற்ற
பெண்ணே !
எனக்கு வேண்டும் -
ஓராயிரம் வார்த்தைகள் !!
ஓராயிரங்களில் வாக்கியங்கள் !!!
இங்கு- ஓராயிரம் என்பதும் கூட
தோராயம் தானெனக்கு !!!

ஒவ்வொரு துறையிலும் உந்தன் சாதனைகளை
என்னால் "எண்ணிக்கூற" முடியாது -
ஆனால் "எண்ணி" கூற முடியும்.

கடலாக கூற வேண்டியதை
கடுகாக கூற வேண்டுமெனில்


பெண் என்பவள் ஆழ்கடல்
பாசத்தை அளிக்கும் பாற்கடல்
நேசத்தை ஏற்கும் நேசக்கடல்
சொந்தங்கள் தாங்கும் பந்தக்கடல்
சோகங்கள் தாங்காத பாசக்கடல்

மொத்தத்தில் - பெண் என்பவள்
பாசம் காட்டி பந்தங்கள் ஏற்பவள் !!
சோகம் மறைத்து சொந்தங்கள் ஏற்பவள் !!!

இன்னுமாய் -
கடலதனை கடக்க கப்பல்கள் வேண்டும்
என்னிடம் உள்ளதோ கட்டு மரமே!!!
கட்டு மரத்தின் கரம் பிடித்து
கரை ஏற முயற்சிக்கின்றேன்.

இறுதியாய் ஓரிரு வார்த்தைகள் !!

உதிர பந்தக்கொடி அறுந்து
இப்புவியில் பிறந்த நாள் முதலாய் - பின்
இறந்து போய் சேர்கின்ற நாள் வரையும்

பெண்ணே !
உன்னால் உலகை பிரிய இயலாது !!
உன்னில் உலகை பிரிக்க இயலாது !!!